யாழ்ப்பாணத்தின் கல்வி, நேர்மை, கண்ணியம் போன்ற பெயருக்குக் களங்கம் வந்துவிட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா அவர்கள் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். சங்கானை வட பிரதேச நல்லொழுக்க தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தப் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
திசை மாறிய இளைஞர்கள்: குற்றவாளிகள் போதையும் போன்தான்!
“ஒரு காலத்தில் பெருமை பேசப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் இன்று திசை மாறி சீரழிந்துகொண்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், கடந்த ஆட்சிகளில் ஏற்பட்ட போதைப்பழக்கமும், கைத்தொலைபேசிப் பாவனையும் தான்!” என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒழுக்கமானது குடும்பத்தில் தொடங்கி, கிராமம் வழியாக நாடு நோக்கி நகர வேண்டும். ஆனால், பழைய அரசாங்கங்களின் தவறான செயற்பாடுகளால் அவை தலைகீழாகிவிட்டதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மதுக்கடைகள் அதிகம்; போதைக்கு நிழல் அரசாங்கமாம்!
எம்.பி. பவானந்தராஜா மேலும் சில பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்:
சாப்பாட்டுக் கடைகளை விட மதுபான சாலைகளே யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் அதிகமாகத் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு கடந்த கால அரசியல்வாதிகள் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை வாங்கித் திறந்ததே காரணம்.
ஒரு பெரிய அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள், போதைப்பொருள் தொழிற்சாலையையே உருவாக்கும் அளவிற்கு போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இவர்கள் கடந்த ஆட்சியில் ஒரு அரசாங்கத்துக்கு ‘நிழல் அரசாங்கமாகச்’ செயல்பட்டார்கள் என்றும் அவர் நேரடியாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் கயவர்கள் 15-20 வருடங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் தான், இன்று வீடு வீடாகப் போதைப் பொருட்களை விநியோகிக்கும் அளவிற்கு ‘திறமை’ பெற்றிருக்கிறார்கள்.
எனினும், “இவர்களை அடக்குவது எமது அரசாங்கத்தின் கடமை. எங்கள் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்திருக்கிறார். நாங்கள் இளைஞர்களை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்” என்று அவர் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாண இளைஞர்களைச் சீரழித்த இந்த “நிழல் அரசாங்கம்” யார் என்று மக்கள் மத்தியில் இப்போது ஒரே பேச்சாக இருக்கிறது!

