பருத்தித்துறை நகரச் சபை எல்லைக்குள் இருக்கிற ஒரு பிரபல பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) கடைக்காரருக்கு வந்த சோதனையைப் பாருங்கள்! எலிகளுக்குக் கொண்டாட்டமும், கடைக்காரருக்குத் தண்டமும் கிடைத்திருக்கிறது!
சமீபத்தில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீரெனப் பல கடைகளில் அதிரடிச் சோதனைக்கு இறங்கினார்கள். அப்போது, இந்தக் கடையில் அவர்கள் கண்டுபிடித்த விடயங்கள் தான் பகீர் கிளப்பியுள்ளது.
அதாவது, நாம் காசு கொடுத்து வாங்கும் உணவுப் பொருட்களுக்குள், எலி எச்சங்கள் (அடப் பாவி!), வண்டுகள் மொய்த்த உணவுகள், பூஞ்சணம் பிடித்த பண்டங்கள், காலாவதியான உணவுப் பொதிகள், எனப் பல ‘வெரைட்டிகள்’ இருந்திருக்கின்றன!
இதனையடுத்து, கடைக்காரர் மீது பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையில், கடை உரிமையாளரும் குற்றச்சாட்டுகளை மறுக்காமல் ‘தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார்’.
உரிமையாளரைக் கடுமையாக எச்சரித்த நீதிமன்று, பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு, கடைக்காரருக்கு அறுபது ஆயிரம் ரூபா (ரூ. 60,000/-) தண்டம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறையில் இப்போது ஒரே பேச்சு இதுதானாம். இனிமேலாவது காசு கொடுத்துச் சாமான் வாங்கும் மக்கள், திகதியையும், அதன் தூய்மையையும் பார்த்து வாங்குவார்கள் என நம்புவோம்!

