யாழ் தீவகப் பகுதிகளில் இப்போதைய ஹாட் டாபிக் (Hot Topic) என்றால் அது புங்குடுதீவு தனியார் பேருந்து உரிமையாளர் அகிலனின் கொடூரமான வாள்வெட்டுப் படுகொலை தான்! கடந்த 10.08.2025 அன்று நடந்த இந்தக் கொலையின் சூடு தணிய முன்னரே, அடுத்தடுத்த பரபரப்புக் கசிவுகள் தீவகமெங்கும் அலையடிக்கின்றன.
கொலையாளி பிடிக்க முன்னர் – லஞ்சம் கேட்ட பொலிஸ்!
அகிலன் கொல்லப்பட்டு, கொலையாளிகள் ஐந்து நாட்களாகியும் பிடிபடாத கோபத்தில், சடலத்தை அடக்கம் செய்யும் நாளான 15.08.2025 அன்று, உறவுகளும் 150க்கும் மேற்பட்ட பொதுமக்களும் குறிகாட்டுவான் பிரதான வீதியில் வீதி மறியலில் இறங்கியமை எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், இந்த போராட்டத்தின் உச்சக்கட்ட பரபரப்புக் காரணம் என்ன தெரியுமா? கொலைகாரரைத் தேட வேண்டிய குறிகாட்டுவான் காவலரண் சார்ஜன்ட் தர பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மதுபோதையில் மேலும் இருவருடன் கொல்லப்பட்ட அகிலனின் வீட்டுக்குப் போய், துணிச்சலாக லஞ்சம் கேட்டது தான்!
இதற்குத் துணை நின்ற தீவகம் சிவில் சமூகம், உலக மையம் மற்றும் பேருந்து சேவை சங்கத்தினரின் அனல் பறக்கும் போராட்டத்தை அடுத்து, யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) நேரில் வந்து சவால் விட்டபடி, லஞ்சம் கேட்ட உத்தியோகத்தரை இடமாற்றம் செய்ததோடு, அகிலன் வீட்டுக்கு 24 மணி நேரப் பொலிஸ் பாதுகாப்பையும் அதே இடத்தில் உறுதிப்படுத்தினார். அத்துடன், பழைய மடத்துவெளி, மண்டைதீவு சந்தி சோதனைச் சாவடிகளும் அடுத்த நாளே மீண்டும் திறக்கப்பட்டதாம்.
ஒப்பந்தக் கொலையாம்! துணுக்காயில் சிக்கிய சூத்திரதாரியின் சகா!
பின்னர், தீவகம் சிவில் சமூகத்தின் முயற்சியால், ஒரு மாதம் கழித்து, கொலைக்குற்றவாளிகளில் ஒருவனான அனலைதீவைச் சேர்ந்த செல்வகுமார் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் (துணுக்காய்) வைத்து சிக்கியுள்ளார்.
அவன் கொடுத்த வாக்குமூலத்தில், இது ஒரு யாழ் நகரத்தின் ஒப்பந்தக் கொலை என்றும், பிரதான சூத்திரதாரி புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு நெருங்கிய நண்பரான கேரதீவைச் சேர்ந்த ஒருவரும் இதில் பங்குதாரர் என்றும் பகீர் தகவல் கசிந்துள்ளது. “நாங்கள் மூவரும் தான் வெட்டினோம்” என்று ஒப்புக்கொண்டுள்ளானாம்!
அடேயப்பா! போராடியவருக்கே கோர்ட் சம்மனா?
இத்தனைக்கும் பிறகு, தற்போது மீண்டும் ஒரு பெரிய டுவிஸ்ட்!
வீதி மறியல் போராட்டம் நடத்தியமை, அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தது என்று சொல்லி, ஊர்காவற்துறைப் பொலிஸார், தீவகம் சிவில் சமூகத்தின் செயலாளர் இளம்பிறையன், உப தலைவர் குணாளன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலன் மற்றும் இரு பொதுமக்கள் உட்படப் பலரது பெயரைக் குறிப்பிட்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
போராட்டம் நடத்தி உரிமையைக் கேட்டவர்களை, எதிர்வரும் 07.10.2025 அன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜராகச் சொல்லி நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாம்.
கொலையாளிகளைப் பிடிக்கச் சொல்லி போராடியதற்கு இதுதான் பரிசா? புங்குடுதீவுப் பகுதிகளில் இந்த விவகாரம் தான் இப்போது உச்சக்கட்டப் பேச்சுப் பொருளாக இருக்கிறது! உண்மை வெளிவருமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

