யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வின் போது பதற்றமான சூழ்நிலை உருவானது. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் செய்ய முயன்ற ஒருவர், அங்கிருந்த பொதுமக்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரம்பன் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்டத்திற்கு வந்த முன்னாள் EPDP உறுப்பினர் ஒருவர், மேடையில் பேசிக் கொண்டிருந்த டக்ளஸுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சமரச முயற்சிகள் பல இருந்தும், அந்த நபர் தனது ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாமல், எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பொதுமக்கள் திடீரென அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிகழ்வு முடிவடைந்ததும், அந்த நபரின் இல்லத்திற்கு சென்ற சிலர் மீண்டும் அவரை தாக்கியுள்ளனர்.
முதற்கட்டமாக ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் தீவிரமாக காயமடைந்த காரணத்தால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.