மன்னார் பேசாலை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியான வைத்தியக் கலாநிதி ஈற்றன் பீரிஸ், தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கும், பழிவாங்கல் நடவடிக்கைக்கும் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் (5) வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளார்.
குறித்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “கடந்த ஏழு வருடங்களாக மன்னார் பேசாலை வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வருகின்றேன். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் தொடர்ச்சியாகப் பழி வாங்கப்பட்டு வருகின்றேன்.
அவர் என்னை ஒரு வைத்தியராக மதிப்பதில்லை. நான் அவரை விட 10 வருடங்களுக்கு மூத்தவன். எனினும் அவரது படிப்புக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டேன். இந்த வைத்தியசாலையில் பணிபுரியும் சில பணியாளர்களை என்னை வேவு பார்ப்பதற்கு அவர் பயன்படுத்துகின்றார்.
அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இங்கு வேலை செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த வைத்தியசாலையில் நான் நிர்வாகத்தை மாத்திரம் அல்லாமால் நோயாளிகளையும் பார்வையிட்டு வருகின்றேன்.
இந்த வைத்தியசாலையில் நோயாளிகளை எவ்வாறு பார்த்துக் கொள்வது, பணியாளர்களை எவ்வாறு நடத்துவது என்பது பணிபுரியும் எனக்குத்தான் தெரியும் . ஆனால் அவர் மன்னார் வைத்தியசாலையில் இருந்து கொண்டு இங்கே இந்த வைத்தியசாலையை நடத்துகின்றார்.
இது மிகவும் அநீதியான ஒரு செயல்.அவரது மேலதிகாரிகள் இவரை இவ்வாறு நடத்தினால் இவருக்கு எப்படி இருக்கும்?
அவரும் வைத்தியர். நானும் வைத்தியர். அவர் என்னை மதிப்பதே இல்லை. அவரது இந்த நடவடிக்கையினால், என்னால் தன்னிச்சையாக செயற்பட முடியவில்லை. என் மீது சில பழிகளும், அவதூறுகளும் சுமத்தப்பட்டது. இருந்தபோதிலும் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.
மின்சாரக் கட்டணங்கள் இவ் வைத்தியசாலையில் உயர்ந்து வருவதாக வைத்திய அதிகாரி எனக்கு சுட்டிக் காட்டி அதைத் தொடர்ந்து, இது தொடர்பாக நான் கவனம் செலுத்தி, பணியாளர்களிடம் சுட்டிக்காட்டி, தேவையற்ற முறையில் ஏசி பாவனையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டு, அதை இந்த வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்திய போதிலும் அது தொடர்பில் கவனம் செலுத்தாது என் மீதே இந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளார்.
கடந்த (11.05.2025) எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சடுதியானதும், நியாயமற்றதுமான மின் பாவனை அதிகரிப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கான மேலதிகக் கட்டணம் பொறுப்பதிகாரியிடமே அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நான் எவ்வாறு தொடர்ந்து வேலை செய்வது? நான் ஓய்வூதியம் பெறுவதா? அல்லது வேறு வைத்தியசாலைக்கு மாறிச் செல்வதா? எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
எனவே இந்த விடயத்தில் எனக்கு நியாயம் வழங்குமாறு மன்னார் மாவட்ட செயலாளர், வடமாகாண ஆளுநர், வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து நியாயம் கோரி போராடும் எனக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.