செய்யும் தொழிலே தெய்வம் என்னும் குறிக்கோளுடன் நேர்மையாகத் தொழில் செய்து, நியாயமான முறையில் பணம் சம்பாதித்து, சமுதாயத்தில் நன் மதிப்பைப் பெற்று, அத்தகைய மதிப்பினால் செல்வாக்கு மிக்கவர்களாகவும் எம் மூதாதையர்கள் வாழ்ந்து வந்தனர்.
ஆனால் தற்போது அந்நிலைமை வெகுவாக மாற்றம் பெற்று வருகின்றது.
பணம் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அந்தப் பணம் எந்த வகையில் வந்தால் என்ன? பணம் மட்டும் போதும் எனப் பணத்துக்கு விலை போகக் கூடியவர்கள் இன்று எம் சமுதாயத்தில் எல்லாத் துறைகளிலும் தாராளமாகக் காணப்படுகின்றனர். அத்துடன் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய மலிவான கட்டமைப்புகளைத் தன்னகத்தே கொண்டதாய் அரச கட்டமைப்புக்களும் துரித கதியில் மாற்றமுற்று வருகின்றது.
இந்திய சினிமாக்களில் வெறும் பொழுதுபோக்குக்காய் நாங்கள் பார்த்து ரசித்தவை எல்லாம் இன்று எம் கண் முன்னே நிதர்சனமாய்க் காணக் கிடக்கின்றது. முறையற்ற வகையில் சேர்த்த பணத்தைக் கொண்டு திறந்த வெளியில் எவருடனும் பேரம் பேசக்கூடிய தைரியத்தை எமது சமுதாயம் இன்று கைகட்டி ரசிப்பது வேடிக்கை மிகுந்ததாய்த் தான் இருக்கின்றது. சரி இனி விடயத்திற்கு வருவோம்.
ஒரு பிரதேசத்தில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகள் அந்தந்தப் பிரதேசத்திற்குரிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்கதாக இருக்கின்றதா? அதேநேரம் அவை முறையாக நிர்வகிக்கப்படுகின்றதா? என்பதை அறிந்து வைத்திருப்பது அப் பிரதேச மக்களின் கடமையாகும். இல்லையெனில் அப்பிரதேசத்திற்குரிய மக்கள் அயற் பிரதேசத்திற்கோ, நகர வைத்தியசாலைகளுக்கோ அல்லது தனியார் வைத்தியசாலைகளுக்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் அப் பிரதேசத்திற்குரிய வைத்தியசாலைகள் நாளடைவில் வெறும் பெயருக்கு மாத்திரமே இயங்கி காலப்போக்கில் அவை நிரந்தரமாக மூடப்படும் அபாய நிலையையும் அடையலாம்.
அந்த வகையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அண்மையில் நடந்த சம்பவம் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது இவ் விடயம் குறித்து எமக்குத் தெரிய வந்தது.
கடந்த காலங்களில் துரித வேகத்துடன் வளர்ச்சி பெற்று யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்ததாக மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவும், வட மாகாணத்திற்கான மனநலப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு போன்ற விசேட சிகிச்சை மையங்களையும் தன்னகத்தை கொண்ட தெல்லிப்பளை வைத்தியசாலை அண்மைக்காலமாக வினைத் திறனற்ற, ஆளுமை அற்ற நிர்வாகிகளிடம் சிக்கித் தவிக்கின்றது. அத்துடன் திட்டமிடப்பட்ட முறையில் தனது சேவை வினைத்திறனை இழந்தும் வருகின்றது கண்கூடு.
அந்த வகையில் அண்மையில் புத்தளத்தைச் சேர்ந்த சகோதர இனத்தைச் சார்ந்த , பண வசதி படைத்தவராக தன்னை காட்டிக் கொள்பவரும் வட மாகாணப் பொலிஸ் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருப்பவரும் , யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் மக்களுக்காக ஒரு நட்சத்திர கேளிக்கை விடுதியை அமைத்து வரும் ஒருவர் புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த வேளையில் கடந்த இரண்டாம் திகதி மதியம் இரண்டு மணியளவில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தனது தாயாரை அனுமதித்துள்ளார்.
அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றார். பின்னர் இரவு 7 மணியளவில் சாதாரண விடுதிக்கு மாற்றப்படுவதற்கு வைத்தியரால் பணிக்கப்படுகின்றார். ஆனால் அந்த நோயாளியைப் பார்வையிட வந்த ஒரு பெண், கடமையில் இருந்த வைத்தியரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
” நீங்கள் இவரைச் சாதாரண விடுதிக்கு மாற்றக் கூடாது, இங்கேயே வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும் ” என்று கேட்டுள்ளார்.
குறித்த நபர் அந் நோயாளியின் மீதான அதீத அன்பின் வெளிப்பாடாலேயே இவ்வாறு கேட்கின்றார் என எண்ணிய வைத்தியர் பொறுமையாக வைத்தியசாலை சிகிச்சை நடைமுறைகளைக் குறித்த நபருக்குத் தெளிவுபடுத்திய போதும் அந்தப் பெண்ணினுடைய பேச்சு வேடிக்கையாக அமைந்ததுடன் வைத்தியர்களையும் வைத்தியசாலை ஊழியர்களையும் இழிவாகப் பேசியதுடன், மிகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொண்டார்.
அத்துடன் ” நீ எங்கள் முதலாளியின் அம்மாவைத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருப்பதென்றால் வைத்திரு இல்லையென்றால் அவரை வெளியே அனுப்பு நான் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை நிர்வாகத்துடன் பேசிவிட்டேன் , அவர்கள் நோயாளர் காவு வண்டியை அனுப்பி ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருக்கின்றார் “என அந்த பெண் கூறினார்.
வைத்தியர் அந்த பெண்ணிடம்
“ஏன் நோயாளியை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு முயற்சிக்கிறீர்கள் அந்த நோயாளி வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை.உங்களுடைய அம்மா என்றால் நீர் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வீரா? என்று கேட்ட போது அந்த பெண் அவசர சிகிச்சை விடுதியில் உள் நுழைந்து கடும் தொனியில் சத்தமிட்டு மரியாதைக் குறைவான வார்த்தைகளால் பேசி வைத்தியசாலையை விட்டு வெளியே வா உன்னை இல்லாமல் செய்கிறேன் என உயிருக்கு அச்சுறுத்தல் வடுவித்தார்.
இவரது இத்தகைய செயற்பாடுகள் அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஏனைய நோயாளிகளையும் பாதித்ததனால் வைத்தியர் போலீசாரை உதவிக்கு அழைத்தார். ஆரம்பத்தில் குறித்த நோயாளி தெல்லிப்பளை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற விரும்பிய போதும் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் வைத்திய விதிமுறைகளுக்கு எதிராக நடந்து வைத்தியர்களின் ஆலோசனைகளையும் மீறி அங்கிருந்து வெளியேறி அந்த தனியார் வைத்தியசாலையை நோக்கிப் பயணமானார்.
இதற்கிடையில் தெல்லிப்பளைப் பொலீஸார் வைத்தியரின் கடமைக்கு இடையூறு செய்த குறிப்பிட்ட பெண்ணிற்கு எதிரான முறைப்பாட்டினை வைத்தியர்களிடமும், ஏனைய வைத்தியசாலை ஊழியர்களிடமும் பதிவு செய்து மேலதிக நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாயினர். ஆனால் அப்போது எவரும் தெரிந்திருக்கவில்லை வட மாகாணத்தின் ஒட்டுமொத்த பொலிஸ் அதிகாரமும் அந்தப் பெண்ணின் முதலாளி ரஹீமின் சட்டைப் பையில் தான் இருக்கின்றது என்பதனை???
இன்று வரை, CCTV பதிவு மற்றும் ஏனைய குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் பலவற்றை வைத்தியசாலை நிர்வாகம் சார்பில் பொலீஸிற்கு வழங்கியிருந்த போதும் தெல்லிப்பளைப் பொலீஸார் அந்தப் பெண்ணின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை. எடுக்க முடியவும் இல்லை.
அடுத்து வட மாகாணத்திற்கான சுகாதாரக் கட்டமைப்பினை நோக்கின், அண்மைக்காலமாக இக் கட்டமைப்பு சிதைந்து வருவது கண்கூடு. வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தன் பாங்கிற்கு அந்தப் பிரமுகரைத் திருப்திப்படுத்துவதற்காக , அவசர சிகிச்சைப் பிரிவு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை ஒன்றை ஆரம்பிக்கும் முனைப்பில் உள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது???
அத்துடன் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நடந்த சம்பவத்தை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரியப்படுத்த முன்னரே சம்பவம் தொடர்பாக அவர் வைத்தியசாலை நிர்வாகியிடம் வினா வியுள்ளார்??? அத்துடன் குறித்த நோயாளியை மருத்துவ ஆலோசனைக்கு எதிராகச் செல்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறும் வைத்தியசாலை நிர்வாகத்தை தனக்கான அதிகார தோரணையில் கடிந்துள்ளார்.
அண்மைக்காலமாக அரச வைத்திய சாலைகளையும் அங்கு நேர்மையாக சேவையாற்றுகின்ற வைத்தியர்களையும் மறைமுகமாக இலக்கு வைத்து சில தனியார் வைத்தியசாலை நிர்வாகிகளினால் ஊதியம் வழங்கப்பட்டு முழு வீச்சில் அரச வைத்திய சாலைகளுக்கு எதிராக, அரச வைத்திய சாலைகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் முகமாக சமூக வலைத்தளங்களில் தமது மொத்த வித்தையையும் காட்டும் சில ஊடக நண்பர்களுக்கு நாம் குறிப்பிட விரும்புவது யாதெனில் ….. மருத்துவ தேவைக்காக மேற்குறித்த தனியார் வைத்தியசாலைகளில் ஒரு நாள் சிகிச்சை செய்வதற்கு கூட நீங்கள் அரச வைத்திய சாலைகளை அழிப்பதற்கு மாதக்கணக்கில் பெற்றுக் கொள்ளும் ஊதியம் போதாது. அத்துடன் சமூக ஊடகங்கள் என்பவை சமூகத்தை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டவையே அன்றி தவறான பாதையில் மக்களை திசை திருப்புவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
மாற்றம் உங்கள் மனங்களிலும் செயல்களிலும் தேவை.
” சமூகத்தை தவறான பாதையில் திசை திருப்பும் அனைவரும் சமூக விரோதிகளே “

