வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம், சுழிபுரம் சந்திப்பகுதியில் இடம்பெற்றது. சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனான முருகசோதி சிறிபானுசன் என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த 15 மதிக்கத்தக்க மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் உயிரிழந்த மாணவனும், படுகாயமடைந்தவரும் மோட்டார் சைக்கிளில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் 1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தியபோதிலும், அம்புலன்ஸ் உரிய நேரத்துக்கு அங்கு வரவில்லை என்றும், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் அனுப்புமாறு கேட்ட போது அவர்கள் நேரங்கடத்தும் விதத்தில் பேசிக்கொண்டிருந்ததாகவும் அங்கு நின்றவர்கள் கூறினர்.
சம்பவம் பற்றிக் கேள்வியுற்ற விபத்துக்குள்ளான மாணவர்களின் உறவினர்களும், நண்பர்களும் சம்பவ இடத்துக்கு வந்த பின்னர் காயமடைந்த இருவரையும் பட்டா ரக வாகனமொன்றில் ஏற்றி அங்கிருந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும் 17 வயது மாணவன் உயிரிழந்திருந்தார். மற்றைய மாணவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேநேரம், விபத்து நடந்த இடத்துக்கு அம்புலன்ஸ் தாமதமாகவே வந்துள்ளது. அந்த நேரத்தில் விபத்துக்குள்ளாகிய மாணவனின் தாயார் மயங்கி விழுந்திருந்தமையால் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவுமாறு அங்கிருந்தவர்கள் கேட்ட போதும், “அவரை ஏற்ற நாம் வரவில்லை அவரை வேறு வாகனத்தில் அனுப்புங்கள்” என்று சொல்லி விட்டு அம்புலன்ஸில் வந்தவர்கள் திரும்பிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.
சுழிபுரம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.