“தமிழரான வடமாகாண ஆளுநர் எனக்கு உத்தரவிடமுடியாது”. ஆளுநரின் உத்தரவுகளை உதாசீனம் செய்து தான்தோன்றித்தனமாகச் செயற்படும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரன.
வடமாகாண சுகாதார சேவைகளை சீர்குலைத்து தமிழ்மக்களை நிர்க்கதியாக்கும் கொழும்பின் நீண்டகால வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாய், வடமாகாண சுகாதார நிர்வாக சேவை வெற்றிடங்களுக்கு, அண்மைக்காலமாய் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவரே தொடர்ச்சியாய் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கொழும்பின் இந்நாசகார செயற்திட்டத்தை வடக்கில் செயற்படுத்துபவர் “கண்டாவளை கட்டாயக் கருத்தடை” புகழ் கிளிநொச்சியின் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கார்த்திகேயன். மிக முக்கிய புலனாய்வு முகவரான இவர், குலத்தை அழிக்கும் கோடரிக் காம்பாய், பல்வேறு நாசகார செயற்திட்டங்களை வடக்கில் செயற்படுத்தி வருகிறார்.
இவரால் நியமிக்கப்படும் அதிகாரிகள் யாவரும் இவரது கொத்தடிமைகளாய், இவரின் உத்தரவிற்கேற்ப அரச சேவைகளை சீர்குலைத்து வருகின்றனர். கார்த்திகேயனின் உத்தரவின்றி சமன் பத்திரன காலைக்கடன் கூடக் கழிப்பதில்லை என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
சரி, விடயத்திற்கு வருவோம். அண்மைக்காலமாய் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானவை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள்.
இவற்றின் சூத்திரதாரி வைத்திய அத்தியட்சகர் தேவநேசன் (மொட்டைப் பெட்டிசன் தேவநேசன் என்றால்தான் இவரை மற்றவர்களுக்குத் தெரியும்). புலனாய்வு கார்த்திகேயனின் நெருங்கிய சகாவான இவர், அவதூறு பரப்பியும் மொட்டைப் பெட்டிசன் எழுதியும் பல நல்ல மனிதர்களின் குடும்பங்களை சீர்குலைத்தவர்.
தேவநேசனின் கையாலாகாத் தனத்தாலும், அடாவடிகளாலும், முன்னொரு காலத்தில் புகழ் பூத்த வைத்தியசாலையான தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகள் சீர்குலைந்த நிலையில் அதனை சீர்படுத்துமாறு போராடி வருகின்றனர் வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள். தேவநேசன் மீது பல்வேறு மோசடி மற்றும் அரச சேவைகளை சீர்குலைப்பதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அண்மையில் 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டமொன்றையும் நிகழ்த்தியிருந்தனர்.
தேவநேசனிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு உடனடியானதோர் குழு அமைக்கப்பட்டு அவரிற்கெதிரான திணைக்களக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே வைத்தியர்களின் கோரிக்கை.
ஆயினும் ஆரம்பத்திலிருந்தே தேவநேசனைக் காப்பாற்றுவதில் குறியாய் இருந்த (கார்த்திகேயனின் உத்தரவுப்படி) மாகாண சுகாதாரப் பணிப்பாளர் பத்திரன இதற்கு சிறிதளவேனும் சம்மதிக்கவில்லை. மாறாக தேவநேசனின் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதில் முன்னின்று போராடிய வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்களுக்கெதிராய் பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலான விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்.
இவ்விடயத்தில் ஆரம்பத்தில் சிறிது நம்பிக்கையளித்த மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெயராணி அவர்கள் பின்பு கார்த்திகேயனின் புலனாய்வு முகவரமைப்புக்களின் எச்சரிக்கையினைத் தொடர்ந்து மதில்மேல் பூனையாக பதுங்கிக் கொண்டார்.
வேறு வழியின்றி வடமாகாண ஆளுநர் திரு.வேதநாயகனை நேரடியாகச் சந்தித்த தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் முக்கிய வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலையின் தற்போதைய அவல நிலையினை உணர்ச்சி பூர்வமாக எடுத்துரைத்ததுடன், அதற்கு காரணமான வைத்திய அத்தியட்சகர் தேவநேசன் மீதான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அழுத்தமாகக் கோரியிருந்தனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஆளுநர் தேவநேசனிற்கெதிரான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரிற்கு பணித்திருந்தார். அதனைக் கேட்டு சீற்றமடைந்த பத்திரன, “எனக்கு யாரும் கட்டளையிட முடியாது. தமிழரான ஆளுநரின் உத்தரவுகள் என்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. எனக்கு மத்திய சுகாதார அமைச்சின் செல்வாக்குள்ளது. மத்தியை மீறி ஆளுநரால் எதுவும் செய்யமுடியாது.
நான் இருக்கும்வரை தேவநேசனிற்கெதிராய் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாது” என அகந்தையுடன் சீறிப் பாய்ந்துள்ளார். ஏற்கனவே சமன் பத்திரன மீது பல்வேறு ஊழல், மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எவ்வித விசாரணையுமின்றி நிலுவையிலுள்ள நிலையில், தேவநேசன் விடயத்தில் அவரின் தான்தோன்றித்தனம் வடக்கில் அரச இயந்திரம் செயற்படுகிறதா எனும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய பாலியல் பலவீனமுள்ள சமன் பத்திரனவின் மன்மத லீலைகளும் அதற்கு அவர் அரச வளங்களையும் நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்தும் வெட்கக்கேட்டை ஆளுநரால் தடுத்து நிறுத்த முடியாதுள்ள நிலையில், தற்போது ஆளுநர் மீதே நேரடியாகப் பாய்ந்துள்ளார் பத்திரன.
பார்ப்போம் ஆளுநரின் பதிலடியை. மிக நேர்மையான, மிகத் துணிச்சலான மனிதரெனப் பெயர் பெற்ற ஆளுநர் சமன் பத்திரன போன்ற ஊழல் பெருச்சாளிகளுக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கும் பணிந்து போவாரா? அல்லது பொங்கிப் பாய்வாரா என?