டிட்வா புயல் முல்லைத்தீவு மாவட்டத்தினால் கடந்ததை அடுத்து, முல்லைத்தீவில் கடந்த இரு நாட்களாக கடும் வெள்ளத்தால், மின்சார துண்டிப்பும், தொலைபேசி, இணைய துண்டிப்பு என முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வெளி தொடர்புகள் அனைத்துமே முற்றாக முடங்கியது.
இந்நிலையில் ஊடகவியலாளர் குமணன் அவர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ததை அப்படியே தந்துள்ளோம்.
🚨தற்போதுதான் முல்லைத்தீவுக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கிறோம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகரை அடைய மாங்குளம் வீதி வழியாக மட்டுமே செல்ல முடியும்.
சில சமூகவலைதள பக்கங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகியதை போன்று முல்லைதீவே மூழ்கி மக்கள் அழியும் நிலை என்ற நிலைமைகள் எதுவும் இங்கு இல்லை, வீணாக பதற்றமடைய வேண்டிய தேவையில்லை ,ஆனால் பெருமளவான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடைதங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரசபை மற்றும் மாவட்ட அனர்த முகாமைத்துவ பிரிவு ,சுகாதார திணைக்களம்,போலீஸ் படையினர் மற்றும் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் Sumanthan Selvaraja, Shanmugam Thavaseelan, Thivakar Thiruchselvam ஆகியோரும் பாரிய இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிகொண்டிருகிறார்கள்.
அநேகமான நகரை அண்டிய இடங்களில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது.சில இடங்களில் தொலைபேசி இணைப்புகளும் மீள இயங்க தொடங்கியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டம் பெரியளவான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
உயிர் சேதங்களை விடவும் பாரியளவிலான பொருளாதர இழப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஐம்பதினாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்கள் அழிவடைந்துள்ளன . ஆயிரக்கணக்கான கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.
பரந்தன் முல்லைதீவு வீதி கண்டாவளைக்கும் புளியம்பொக்கணை சந்திக்கும் இடையில்உள்ள பாலங்கள் உடைந்து இறங்கியுள்ளதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. முல்லைத்தீவிலிருந்து திரிகோணமலை மற்றும் கொக்கிளாய் செல்லும் வீதியில் உள்ள நாயாறு பாலம் உடைந்துள்ளது. இதனால் நாயாறு பாலத்துக்கு அப்பால் உள்ள கொக்கிளாய் கொக்குதொடுவாய்,கருநாட்டுகேணி கிராமங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன.
வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
புதுக்குக்குடியிருப்பு நகருக்கு செல்ல ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியை பயன்படுத்தலாம் சில இடங்களில் வெள்ளம் வழிந்தோடுகின்றது ஆனால் அவதானமாக செல்ல முடியும். முள்ளியவளையிலிருந்து கேப்பாபுலவு ஊடாக புதுக்குடியிருப்புக்கு அவதானமாக செல்ல முடியும் .
கேப்பபுலவு ஊடாக புதுக்குடியிருப்பு செல்லும் வீதியிலும், புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி மற்றும் மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் காட்டு யானைகள் வீதியில் நிற்கின்றன. அவதானமாக பயணிக்கவும்.
அவசர நிவாரண உதவிகள் மற்றும் இதர உதவிகள் தேவைப்படும் நிலையில் மக்கள் காணப்படுகிறார்கள்.
தகவல் – குமணன்




