மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த நபர் ஒருவர், அயலவர்களால் பிடிபட்டு மரத்தில் கட்டி வைக்கப்பட்ட பிறகு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர், கடந்த 2 வருடங்களுக்கு முன்னரும் இதே வீட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தகராறு ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் அவர் மனநலக்குறைவு காரணமாக விடுவிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
தற்போது சுவிஸில் வசித்து வரும் யாழ் பருத்தித்துறை பூர்வீக நபர் என்பதுதான் அவருடைய அடையாளம். கடந்த காலத்தில் அவர் பனிக்கன்குளத்தை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவருக்காக பண உதவிகளும் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
இந்தப் பெண் தற்போது திருமணமான நிலையில், அந்த நபரின் தொடர்ந்த தொந்தரவு தான் இச்சம்பவத்துக்குக் காரணமென கூறப்படுகிறது. நேற்று அவர் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்ததையடுத்து, பெண்ணையும், அவரது தாயாரையும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அயலவர்கள் துரிதமாக மோதலை கட்டுப்படுத்தி, நபரை கட்டிவைத்து மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தாக்கப்பட்ட நிலையில் உள்ள அவரை மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.