Monday, December 8, 2025
HomeSri Lankaதெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தொழிற்சங்க நடவடிக்கை - முஷ்தீபு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தொழிற்சங்க நடவடிக்கை – முஷ்தீபு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்த படியாக மக்களிற்கானமருத்துவ சேவைகளை வழங்குவதில் முக்கியமான வைத்தியசாலையாகும். கடந்த சில ஆண்டுகளில் இவ் வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவ அத்தியட்சகர்கள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் ஏனைய ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிளை செயற்பாட்டின் மூலம், இவ்வைத்தியசாலை பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளது. மனித வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன் பதினாறு வைத்தியர்கள் கடமையாற்றிய நிலையில் தற்போது கிட்டத்தட்ட அறுபது வைத்தியர்களும் நான்கு உள்ளக வைத்தியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது வைத்தியம், சத்திர சிகிச்சை, மகப்பேற்றியல், குழந்தை மருத்துவம் மற்றும் கதிரியக்க பிரிவு அனைத்துக்கும் இரண்டு வைத்திய நிபுணர்களும் கடமையாற்றி வருகின்றனர்.இவை அனைத்தும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) மற்றும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்பினால் சாத்தியமானது.

அத்துடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையானது வடமாகாணத்தில் உள்ள ஒரு பிராந்திய புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் நிலையமாகவும் மனநல பாதிப்படைந்த நோயாளிகளுக்கான ஒரு முக்கியமான சிகிச்சை வழங்கும் நிலையமாக காணப்படுகின்றது.

தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக தெல்லிப்பளை மருத்துவமனை நிர்வாகம் மிகவும் மந்தகதியில் செயல்படுகிறது மற்றும் மனநல சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிற சிகிச்சை சேவைகளில் திருப்திகரமான ஈடுபாடு இல்லாமல் இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் மருத்துவமனை நிர்வாகியின் செயல்திறன் குறைபாடு மற்றும் அவரது அலுவலகத்திலிருந்து வெளியே வந்து மற்ற வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் நேரடியாக பேசி, பயனுள்ள சந்திப்புகளை ஏற்பாடு செய்து, உடனடி தீர்வுகளை வழங்கும் ஆர்வம் இல்லாமையே ஆகும். இந்த தாமதம் நோயாளிகளின் நலனையும், மருத்துவ சேவையின் தரத்தையும் பாதிக்கின்றது.

புற்றுநோய்களிற்கான சிகிச்சை வழங்குவதில் புற்றுநோய் வைத்திய நிபுணர்கள் பல இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.முக்கியமாக அங்கே நோயாளிகளிற்கான சில பரிசோதனைகள் பல்லாயிரக்கணக்கான
(40,000 தொடக்கம் 50,000 வரை) அவர்களின் சொந்த பணத்தை செலவழித்து தனியார் ஆய்வு கூடங்களிலேயே செய்யப்படுகிறது.இதை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் Nuclear Medicine அலகு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அவ்வகையான பரிசோதனைகளை செய்ததற்கு தேவையான ஆய்வுகூட வசதிகளை செய்ய முன்வந்த போதும் வைத்தியசாலை நிர்வாகம் அதற்கான இடம் வழங்குவதில் இழுத்தடிப்பை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் புற்றுநோயின் இறுதி கட்டத்தை அடைந்த நோயாளிகளின் இறுதி நேரங்களை வலியின்றி பராமரிப்பதற்காக விடுதி ஒன்றை அமைப்பதற்கும் புற்றுநோயாளிகளின் மருத்துவ பதிவேடுகளை பேணி பாதுகாக்க தேவையான அறையினை நிர்மாணிக்க பல தடவைகள் அனுமதி கோரிய போதும் அதனை வழங்காது பெரும் முட்டுக்கட்டையாக நிர்வாகம் இருந்து வருகிறது. இதனால் புற்றுநோயாளர்களிற்கான சேவையினை பூரணமாக வழங்குவதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் மனநல சிகிச்சை விடுதிகள் மற்றும் பிற விடுதிகளில் வைத்திய நிபுணர்களால் முன்மொழியப்படும் சிகிச்சைத் திட்டங்களை உரிய தரப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளாமல் நிராகரிப்பதன் மூலம், நோயாளர்களுக்கான பூரண சிகிச்சை வழங்குவதில் மருத்துவ நிபுணர்களின் ஒருமித்த சேவையை வழங்க இயலாத புறச்சூழ்நிலைகள் உருவாகின்றன.

நோயாளர்களுக்கான சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக சுகாதார திணைக்களம் மற்றும் பிரதம செயலாளர் ஆளுநர் அலுவலகங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் நிறைவேற்றப்படும் முடிவுகளை நிறைவேற்றி நோயாளர்களுக்கு கிடைக்கக்கூடிய அதிக உச்ச சேவையை எமது வைத்தியசாலையில் உள்ள மனித வளங்களையும் ஏனைய வளங்களையும் பயன்படுத்தி வழங்காது தெல்லிப்பளை வைத்தியசாலையை புற்றுநோய் விடுதிகளையும் மனநல நோய் விடுதிகளையும் ஏனைய விடுதிகளையும் திறம்பட நிர்வாகம் தவறியுள்ளது.

அத்துடன் நோயாளர் நலன்புரி சங்க சேமிப்பு நிதியை நோயாளிகளின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தாமலும் ஏனைய தொண்டு நிறுவனங்கள் மற்றும் நலன் விரும்பிகளினால் நோயாளர்களின் மருத்துவ சேவையை திறம்பட வழங்குவதற்கு முன்வைக்கின்ற வசதிகளை வழங்குவதிலும் ஒருங்கிணைப்பதிலும் ஆர்வம் காட்டாது அதற்கு முட்டுக்கட்டையாகவும் நிர்வாகம் இருந்து வருகிறது.

அத்துடன் வைத்தியசாலை ஊழியர்கள் முகம் கொடுக்கின்ற பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக பல முறைப்பாடுகளை முன் வைத்துள்ள போதிலும் அதற்குரிய தீர்வுகளை வழங்காது தான்தோன்றித்தனமான முடிவுகளை மேற்கொள்வதால் வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை வழங்குவதில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அதிலும் குறிப்பாக கடந்த 02.04.2025 அன்று இரவு ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பளையின் அவசர சிகிச்சை பிரிவில் இடம்பெற்ற, தனிநபர் ஒருவரால் வைத்தியசாலை ஊழியர்களின் கடமைக்கும் ஏனைய நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கும் இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக, வைத்தியசாலை நிர்வாகம் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு இருக்கவில்லை.

இவ்வாறு நிர்வாகத்தின் பல செயற்பாடுகளை கண்டித்தும் குறித்த தினத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதுவித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், வைத்தியர்களுடனும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்களுடனும் தொடர்புடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதை கண்டித்தும், மேலும் அது தொடர்பான நடுநிலையான, பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க வலியுறுத்தியும், எதிர்வரும் 02.05.2025 அன்று காலை 8.00 மணி முதல் 03.05.2025 காலை 8.00 மணி வரையிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ள இருக்கின்றது. இதற்கு ஏனைய வைத்தியசாலை தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவிக்க உள்ளன.

எனவே, இதற்குரிய உடனடி விசாரணைகளை வட மாகாண, யாழ் பிராந்திய சுகாதார திணைக்களம், பிரதம செயலாளர், வட மாகாண ஆளுநர் ஆகியோர் ஆரம்பித்து, வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கும் சேவை நிலையமாக மாற்றுவதற்கான நிர்வாக சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்,
தெல்லிப்பளை கிளை
30/04/2025

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments