யாழ்ப்பாணம் கச்சத்தீவு பகுதியில் மீட்கப்பட்ட இரண்டு தமிழக கடற்தொழிலாளர்களையும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் பகுதியில் இருந்து ஒரு படகில் கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்கு சென்ற நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் , நால்வரும் கடலில் மூழ்கியுள்ளனர்
அவர்களில் இருவர் கச்சத்தீவு பகுதியை நோக்கி நீந்தி கரை சேர்ந்திருந்தனர். ஏனைய இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
கரை சேர்ந்த இருவரும் இலங்கை கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் காணாமல் போன இருவரையும் கடற்படையினர் தேடிய நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டு, இராமேஸ்வரம் துறை முகத்தின் ஊடாக சடலம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் கச்சத்தீவில் கரை ஒதுங்கிய இரு கடற்தொழிலாளர்களையும் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை இருவரும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.