இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்றாலே நேர விரயத்தை ஏற்படுத்தி, மக்களை காக்க வைக்கும் வங்கிகள் என்றே பொதுவாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் அவை அரச வங்கிகள் என்பதால் சுறுசுறுப்புடன் இயங்க மாட்டார்கள் என்பதே மக்களின் கணிப்பு. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதுவும் உண்மையே.
ஆனால் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கி கிளையானது மேற்குறித்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டது. காரணம் அந்த வங்கி கிளையில் ஒரு துடிப்புள்ள பெண்ணொருவர் முகாமையாளராக கடமை புரிவதேயாகும்.
நான் பல தடவைகள் வங்கிக்கு சென்றபோது, அந்த முகாமையாளர் ஓய்வின்றி ஏதோ ஒரு வேலை செய்து கொண்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது.
வாடிக்கையாளர்கள் நிறைதிருந்தால் தனது அலுவலக அறையை விட்டு உடனே எழுந்து வெளியே வந்து “ஏன் வாடிக்கையாளர்கள் இவ்வளவு அதிகமாக இருக்கின்றனர், அவர்களுக்கான சேவைகள் விரைவாக வழங்கப்படவில்லையா” என்று வினவுவார். வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை விரைவாக வழங்கி, காலதாமதத்தை தவிர்ப்பதற்கு தானும் களத்தில் இறங்குவார். தான் ஒரு முகாமையாளர் என்பதை மறந்து, உத்தியோகத்தர்களுடன் இணைந்து சமமாக பணிபுரிவார்.
அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் ஏதாவது சொன்னால்கூட, வாடிக்கையாளர்களை தாமதப்படுத்த கூடாது என்று அவர்களுக்கு புத்திமதி கூறுவார். இன்முகத்துடன் வாடிக்கையாளர்களுடன் சிறந்த தொடர்பாடலை பேணுவார்.
பல நிறுவனங்களின் முகாமையாளர்களை பார்த்துள்ளேன். அவர்கள் தங்களுக்கு கீழே வேலை செய்யும் உத்தியோகத்தர்களை ஏதோ அடிமைகள் போலே வழிநடத்துவார்கள். அப்படி வழிநடத்துகின்ற முகாமைத்துவமானது ஆரோக்கியமற்ற / கையாலாகாத ஒரு முகாமைத்துவம். காரணம், ஊழியர்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லாமல் கடமைக்காக வேலை செய்வார்கள். முகாமையாளர்கள் ஊழியர்களுடன் நண்பர்கள் போல் பழகினால் மாத்திரமே நிறுவனத்தின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
முறையற்ற முகாமைத்துவத்தில் ஈடுபடும் வங்கிகளின்/ நிறுவனங்களின் முகாமையாளர்கள் வட்டுக்கோட்டை இலங்கை வங்கி கிளைக்கு ஒருதடவை சென்று பார்வையிடுங்கள். உங்களுக்குள் இருக்கின்ற ஆணவம் என்ற புற்றுநோய் அப்போதாவது குணமாகின்றதா என பார்ப்போம்.

