கார்த்திகை 27 என்றாலே தமிழர்களுக்கு அது ஒரு புனிதமான நாள். அதிலும் நல்லூர் வீதியில் உணர்வுகள் பொங்கி வழியும். ஆனால், இன்று நடந்த மாவீரர் தின நிகழ்வில் முன்னாள் மாநகர மேயர் மணிவண்ணன் செய்த காரியம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவாலயத்தின் பிரதான ஈகைச்சுடர் ஏற்றும் மேடை அது. அந்தப் புனிதமான இடத்தில், தங்கள் பிள்ளைகளை இழந்த மாவீரர்களின் பெற்றோரும், உரித்துடைய உறவுகளும் மட்டுமே ஏறி நின்று சுடரேற்ற வேண்டிய இடம். ஆனால், அங்கே முன்னாள் மேயர் மணிவண்ணன் “நானும் ஒரு ரவுடி தான்” பாணியில் மேடையில் ஏறி நின்றதுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கும் விவாதம்.
கூடியிருந்த பொதுமக்களில் பலர், “இது என்ன ஐயா அநியாயம்? மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்திலும் அரசியல் விளம்பரமா?” என்று வெளிப்படையாகவே அதிருப்தியை வெளியிட்டனர்.
வழக்கமாக அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களோடு மக்களாக நின்று அஞ்சலி செலுத்துவதுதான் மரபு. ஆனால், அங்கே கூடியிருந்த மாவீரர் பெற்றோரை விடத் தான் பெரியவர் என்பது போல, மேடையின் மேலே ஏறி மணிவண்ணன் நின்றது ஆணவத்தின் உச்சம் என மூத்தவர்கள் சிலர் முணுமுணுத்ததை கேட்க முடிந்தது.
“சுடர் ஏற்றும் உரிமையை உறவுகளுக்கு கொடுத்துவிட்டு ஓரமாக நிற்கத் தெரியாதா? போட்டோவுக்கு போஸ் கொடுக்க இது என்ன தேர்தல் மேடையா?” என்று இளைஞர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் மணியை வறுத்து எடுத்து வருகிறார்கள்.
புனிதத்தை பேண வேண்டிய இடத்தில், தன்னை முன்னிலைப்படுத்த மணி செய்த இந்த செயல், “அரசியல் லாபத்திற்காக எதையும் செய்வார்கள்” என்பதை காட்டுவதாகவே மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
மொத்தத்தில், நல்லூரில் மணி ஏற்றியது சுடர் அல்ல; மக்களின் வயிற்றெரிச்சலைத் தான்!

