தெல்லிப்பளை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு தேவையான போஷணை உணவுகள் குறைந்த தரத்துடன் வழங்கப்படுவதுடன், அரச சொத்துக்களும் மாயமாகும் நிகழ்வுகள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு போசணைக்கு மிக குறைந்த போசணையான உணவுகளே வழங்கப்படுகிறது.
உணவகம் ஒன்றின் உரிமையாளர் வழியாக குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகின்ற உணவுகள் மிக குறைந்த போசணையுடன் உள்ளதாக விடுதிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த குறைபாடுகள் நிர்வாகத்துக்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டும், இதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. முக்கிய நிர்வாக அதிகாரியொருவர் இவ்விகாரத்தில் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், வைத்தியசாலையின் பழைய கட்டிடங்களில் சேமிக்கப்பட்டிருந்த பெறுமதியான மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் உள்ளிட்ட கட்டிடப்பயன்பாட்டு உபகரணங்கள் மர்மமாக மாயமாகியுள்ளன.
அண்மையில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்களும், மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியும் சுத்தம் செய்யப்படும்போது, பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பொருட்கள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவத்தில் வைத்தியசாலை பணிப்பாளருடன் நெருக்கமாக செயற்படும் இருவரே ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருந்த போதே, வாகனங்களில் இந்த பொருட்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஏற்கனவே வைத்தியசாலையின் சீர்குலைந்த நிர்வாகத்திற்கு பணிப்பாளரே காரணம் என பலர் குற்றம்சாட்டிய நிலையில், இம்மோசடிகள் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடமாகாண சுகாதாரத் திணைக்களமும், வடக்கு ஆளுநர் அலுவலகமும் உடனடியாக விசாரணை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென வைத்தியசாலை நலனில் அக்கறை உள்ளவர்கள் வலியுறுத்துகின்றனர்.