வடக்கு மாகாண சுகாதாரத் திணைக் களத்தில் நிலவுகின்ற பற்றாக்குறைகள் காரணமாக பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு சேவைகளை வழங்க முடியாமல் வைத்தியசாலைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு மத்திய அரசு வட மாகாணத்துக்கு தேவையான வளங்களை வழங்காமையே காரணமாகும்.
சமத்துவ அடிப்படையில் ஆளணி, கட்டுமான, நிதி ஒதுக்கீடுகளை வழங்குமாறும், ஆளணி அதிகரிப்பைச் செய்யுமாறும் மாகாண சுகாதார அதிகாரிகள் பல தடவைகள் கோரியும் இன்றுவரை முன்னேற்றம ஏதும் ஏற்படவில்லை. இதனால் வடமாகாண வைத்தியசாலைகளில் பாரிய வளக்குறைபாடுகள் நிலவுகின்றன.
இதனால் பல சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்படுகின்றன. இதில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் ஒன்று. மத்திய அரசின் பாரபட்சமான செயற்பாடுகளால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவிய குறைபாடுகள் அனைத்தையும் வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியர்கள் சுகாதார நிர்வாகிகளின் தவறே காரணம் எனக் கூறி குற்றச்சாட்டுகளை அவிட்டு விட்டார் நம்ம டாக்குத்தர்.
இதில் கூறிய தகவல்கள் அனைத்துமே திசை திருப்பப்பட்டவை ஆகும். இதன் உண்மையை அறியாத நிலையில் அருச்சுனா எழுப்பிய விடயங்கள் தொடர்பாக அதிக அளவில் ஏமாந்து போயினர். ஆனால், இன்று வரை அவர் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் கூட சமர்ப்பிக்க முடியாமையால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரால் தெரிவிக்கப்பட்ட தனிப்பட்ட அவதூறுக் குற்றச்சாட்டுகளுக்காக பாதிக்கப்பட்ட பலர் மான நட்ட வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து இருக்க வேண்டிய யாழ் மாவட்ட, வடமாகாண சுகாதார திணைக்களங்கள், மாகாண சுகாதார அமைச்சு, பிரதம செயலாளர் அலுவலகம், ஆளுநர் அலுவலகம் என அனைவரும் இவரது குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று வரை ஒரு விளக்கத்தைத் தானும் பொது மக்களுக்கு வழங்கவில்லை.
பத்திரிகைகளுக்கு விளக்கம் வழங்க அனுமதி தருமாறு கோரிய அதிகாரிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வரை சில பொதுமக்கள் அர்ச்சுனா கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த தேர்தல் காலத்தில் அர்ச்சுனாவும் ஒரு சுயேட்சைக் குழுவாக போட்டியிடுவதால் இவரது பொய்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகளை யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட மக்களுக்கு வழங்குகின்றோம்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 15 வருடங்களாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் பாவிக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது – இக்கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்தக்காரர்களுக்கான வேலை வழங்கும் கடிதம் 2015 நவம்பர் மாதமே வழங்கப்பட்டது. மூன்று வருடங்களில் பூர்த்தி செய்வதாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.
திட்டமிடப்பட்டிருந்த மூன்று ஆண்டுகாலத்தில் கட்டடத்தை கட்டி முடிக்க முடியாமல் போனது. கட்டடம் இறுதியாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான காரணம் இக்கட்டடத்தை கட்டுவதற்கான நிதியை மாகாண சபையால் தனது நிதியிலிருந்து ஒதுக்க முடியாமல் போனதும் மத்திய அரசாங்கம் இக்கட்டத்திற்கான மீதி நிதியை தருவதற்கு தொடர்ச்சியாக மறுத்து வந்தமையும் ஆகும்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்காக ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் 200 மில்லியன் ரூபா ஊழல் செய்யப்பட்டுள்ளது என்று சில தடவையும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது என சில தடவையும் கூறினார் – இந்த விபத்து அவசர சிகிச்சை பிரிவை கட்டுவதற்கான முடிவு எடுக்கப்பட்ட போது அதனுடன் சேர்ந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் ஒரு விபத்து அவசர சிகிச்சை பிரிவை கட்டுவதாக மாகாண சுகாதார அமைச்சால் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு அமைய 2014 இல் இருந்து மத்திய சுகாதார அமைச்சுக்கு அதற்கான அனுமதிகளுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டு 2015 ஆரம்பத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அனுமதிக்கான கோரிக்கை கடிதத்தில் சாவச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு ரூபாய் 135 மில்லியன் நிதி மட்டுமே மொத்த தேவையென கோரப்பட்டிருந்தது.
மேலும் இக்கட்டிடம் 2023 ஆகஸ்டில் முழுமையாக கட்டுமுடிக்கப்பட்ட போது அதற்கான மொத்த செலவு ரூபா 156 மில்லியனாக மாத்திரமே அமைந்தது. இதனால் வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூபா 400 மில்லியனில், ரூபா 200 மில்லியன் ஊழல் செய்யப்பட்டுள்ளது, வவுனியாவுக்கு ரூபா 200 மில்லியன் மாற்றப்பட்டது என்பன யாவுமே பொய்யாகும்.
இக்கட்டடத்திற்குரிய மின்பிறப்பாக்கி தேவை என்பது கருத்தில் எடுக்கப்படவில்லை – இக்கட்டத்திற்கான தனியான மின்பிறப்பாக்கி ஒன்று தேவை என்பதற்கான உத்தியோகபூர்வமான கோரிக்கை 2022 ஆம் ஆண்டில் கட்டிடத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தொடங்கிய போது கருத்தில் எடுக்கப்பட்டு அதற்கான நிதியும் 2023 ஆரம்பத்திலேயே ஒதுக்கப்பட்டது.
அதற்கான கொள்வனவு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் 2024 ஐப்பசியில் வைத்தியசாலைக்கு விநியோகிக்கப்பட இருந்தது.
சாவகச்சேரி அதார வைத்தியசாலையில் மகப்பேற்று சேவைகள் முழுமையாக வழங்கப்படவில்லை. அதை தானே வழங்க ஆரம்பித்தேன் எனக் கூறியமை – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதி ஒன்று எப்போதும் இயங்கி வருகின்றது.
அவ்விடுதியில் முன்னர் பல பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன. அக்காலத்தில் தாய் மரணங்கள் தொடர்பான ஸ்ரீலங்கா அரசின் அவதானம் குறைவாக இருந்தது. காலப்போக்கில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முன்னேற்றமான தாய் சேய் நலக் கொள்கைகளின் அடிப்படையில் தாய் மற்றும் சேயின் உயிர் பாதுகாப்புக்குத் தேவையான மகப்பேற்று வைத்திய நிபுணரும் சிசேரியன் சத்திர சிகிச்சை செய்வதற்கான வசதியும் இல்லாத இடங்களில் சிக்கலான பிரசவங்களை செய்யக்கூடாது என்ற கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அப்போது வரை மகப்பேற்று வைத்திய நிபுணர் நியமிக்கப்படவுமில்லை, சத்திர சிகிச்சைக்கான வசதியும் இருக்கவில்லை. அதற்கமைய தாய் மரணங்களைக் குறைக்கும் நோக்கத்துக்காக சுகப் பிரசவம் என 100% உறுதியான பிரசவங்கள் தவிர ஏனைய பிரசவங்கள் குறைந்து வந்தன.
ஏனையோர் அரச கொள்கைக்கு அமைய யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். ஆனாலும் 2023ம் ஆண்டில் 24 சாதாரண பிரசவங்களும் 2024ல் அருச்சுனா வரும் வரை 11 பிரசவங்களும் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெற்றிருந்தன.
அருச்சுனாவின் உருட்டுக்களும் வெளிவராத மர்மங்களும் பாகம் தொடரும்…!