சாவகச்சேரி வைத்தியசாலையில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அங்கு பல ஊழல்கள் இடம்பெற்றதாகவும் பொது வெளியில் கொண்டு வந்து மக்களை தூண்டிவிட்டு மக்கள் போராட்டத்தை ஏற்படுத்தியவர் முன்னாள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா.
அவரால் மற்ற வைத்தியர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து ஏனைய வைத்தியர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் வைத்தியர் அர்ச்சுனா தனக்கு ஆதாரங்களை நீதிமன்றிற்கு அளிக்க கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் இன்று சட்ட வைத்திய நிபுணர் வாசுதேவாவுடன் உரையாடிய தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகளை இன்று முகநூல் நேரலை மூலம் வெளியிட்டிருந்தார்.
இவ் உரையாடல்களில் வைத்திய நிபுணர் வாசுதேவா தனது சக துறைசார் வைத்திய நிபுணர்களை தரக்குறைவாகவும் பணத்திற்காக தொழில் புரிபவர்களாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு மற்ற வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் பலரைப் பற்றி எள்ளி நகையாடும் வைத்தியர் வாசுதேவா சில வருடத்திற்கு முன்பு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக உரிய அனுமதியின்றியும்,மருந்தாளார் இன்றியும் மருந்தகம் ஒன்று நடத்தி வந்தவர் என்பதும் அந்த மருந்தகம் பின்பு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது வைத்திய நிபுணர் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் கடமை புரிந்த வண்ணம் நாச்சிகுடா சந்தையில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவ நிலையத்தின் மீது Pregabalin என்கின்ற போதையூட்டும் மருந்தை வைத்தியரின் மருந்து சீட்டின்றி விற்பனை செய்ததாகவும் முன்பு உணவு மற்றும் மருந்து பரிசோதகரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சட்ட வைத்திய அதிகாரி தன் துறை சாராமல் மற்றைய துறை சார்ந்த நோயாளிகளை தனியார் வைத்திய நிலையத்தில் பார்வையிடுவது நகைப்புக்குரிய விடயமாகும்.
அத்துடன் தற்பொழுது வைத்தியர் அர்ச்சனா செய்வதறியாது செல்லும் வழியற்று நிர்க்கதியாகியுள்ளார். இவர் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பேரம் பேசி ஒன்றும் பலனளிக்கவில்லை. தற்பொழுது பொது வேட்பாளர் என்ற பட்டத்தை ஏற்றி தன்னை பிரபல்யப்படுத்த முனைகிறார். அத்துடன் நல்லூர் சப்பரத் திருவிழாவுக்கு சென்ற இவரை எவரும் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை.
இவருக்கு சில புலம்பெயர் தமிழர்கள் பின்புலத்தில் உதவி செய்து வருகின்றனர். ஆனால் இவரால் ஆரம்பிக்கப்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலை விடயங்களிற்கான ஆதராங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையிலும் சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர் விடுதியை தனது உல்லாச தேவைக்காக(Guest house) பயன்படுத்தி வரும் நிலையிலும் சாவகச்சேரி மக்கள் தம்மை வைத்தியர் ஏமாற்றியுள்ளதை அறிந்து கடும் விசனத்தில் உள்ளனர்.
பெரும்பாலும் ஒரு சில நாட்களில் சாவகச்சேரி மக்கள் தம்மை பயன்படுத்தி அரசியல் செய்து வரும் வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியர் விடுதியை விட்டே துரத்தியடிப்பார்கள் என்று அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.